Sunday, June 12, 2011

இந்தியனாய் இணைந்து நில்!


இந்தியனாய் இணைந்து நில்!








பெற்றவளின் சுரக்கும் பால் அதனையும் தான், அந்தோ!
பணங்காசு பெற்றே தன் பிள்ளைக்கோ விற்றாள்?
கற்றோராய் கனிந்தோராய் குடி நினைந்தோர் எல்லாம்
கைக்காசுக் கேட்டேதான் நட்டாற்றில் விட்டார்!

பற்றெல்லாம் எமக்கிந்த பெரும் நாடேதான் என்றார்,
பெற்றிட்ட பெருஞ்செல்வம் எமதில்லை காண் என்றார்.
உற்றோராய் உறவாடி இருந்த நல்தோழர் உந்தன்
செற்றோர் காண் என உரைத்து கபடத்தால் தான் பிரித்தார்!

நற்றோழா சகக்குடியே ஒரு நாட்டார் பிரிதல் ஆமோ?
வற்றாத சீவநதி சிறுவெயிலில் உலர்ந்திடுமோ?
பட்டிணியாய் நாமிருந்து பெற்ற பெரும் சுதந்திரமும்
பகட்டான ஊழலதன் காலடியில் நசுங்கிடுமோ?

மற்றவரின் குறைமறந்து, ஓரணியில் நாம் திரள்வோம்!
ஒற்றுமையாய் நாமிருந்து பெரும் வளமை இனிபெறுவோம்
வெற்றியெலாம் ஒற்றுமையில் என்பதனை நீ காண்க!
ஊழலதன் வேர் களையும் ஜன்லோக்பால், புவி வாழ்க!

-குழலவன்



Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

No comments:

Post a Comment