Friday, December 30, 2011

"உண்மை விளம்பிகளின்" உண்மை முகம்!!


நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனைச் செய்வாரடி ‍- கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!
                                                                   - பாரதியார்

அன்னா ஹஜாரே பிடியை சற்று தளர்த்தினாரோ, உடனே அரசியல் வாதிகளுக்கு மீண்டும் வால் முளைத்து விட்டது. ஆளுங்கட்சி லோக்பால் என்ற பெயரில் ஒரு "அஞ்சலகத்தை" மட்டும் உறுவாக்க முயல்கிறது என்றால், ஊரில் இருக்கும் மற்ற நண்டு சுண்டு கட்சிகளும் உருப்படாத சில "மாற்றங்களைக்" கொண்டுவர முனைந்தனவாம், இதனால் தான் ஒரு முடிவும் எடுக்காமல் நேற்று இரவு கூட்டத்தொடரை முடித்துக் கொண்டார்களாம். முக்கியமானசிக்கலானவற்றை எப்படி தட்டிக்கழிப்பது என்று இவர்களிடம் பாடம் கற்க வேண்டும். பெண்டாட்டியிடம் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழிக்கும் கணவன்மார்களுக்கு அந்த பாடங்கள் பெரிதும் உதவும்.

இவர்களின் கூத்து இப்படி இருக்க ஊரில் இருக்கும் வெறும்வாய்மெல்லிகளின் அலும்பல்கள் தாங்க முடிவதில்லை. தங்கள் சோம்பேறித்தனத்திற்கு தன்னை நோகாமல் பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் முழுநேரத் தொழில். பெரும்பான்மையான கருத்திற்கு மாற்றுக்கருத்தைக் கூறினால் கவனத்தை ஈர்க்கும் என்பதனால் சில "பேப்பர் போராளிகள்" வெட்டியாக வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். அன்னா ஹஜாரேவைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் (இரு நிமிடம் விக்கீ பீடியாவை பார்த்தாலே போதும்) அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். மகாரஷ்டிராவில் பி.ஜெ.பி முதல்ரவர் முரளிமனோகர் ஜோஷியின் அமைச்சர்களை எதிர்த்துப் போராடி அவர்களைப் பதவி இழக்கச் செய்ததும், தென்நாட்டின் முதல் பி.ஜெ.பி முதல்வர் எடியூரப்பாவை பதவி விலகச்செய்த சந்தோஷ் ஹெக்டேவை முழுமையாக ஆதரிப்பதும் கூட தெரிந்து கொள்ள "விரும்பாமல்" அவர் பி.ஜெ.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.


மக்கள் ஆட்சி என்பது, மக்கள் ஆட்சிசெய்வது தானே ஒழிய, மக்களை ஆட்சிசெய்வது இல்லை. இதற்காக அன்னா ஹஜாரே பெருவாரியான மக்களின் கருத்துகளைத் திரட்டி அதை ஒரு மசோதாவின் வடிவில் பாராளுமன்றத்தில் கொடுத்து சட்டமாக்கச் சொன்னார். இதுவே உண்மையான மக்களாட்சி. மக்கள் "பிரதிநிதி"கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர், மக்கள் "அதிபதி"களாக செயல் படுகின்றனர். ஒரு சாமானியனின் கேள்வி இது தான் "எனது கருத்துகளை கேட்கவே கேட்காத ஒருவரை எனது பிரதிநிதி என்று எப்படி ஒப்புக்கொள்வது?". இதில் பிழை இருப்பதாய் தெரியவில்லை. ஒரு இந்தியத் தூதர் "நான் இந்திய அரசின் பிரதிநிதி. அதனால் எதிரி நாட்டுடன் நான் போட்ட ஆயுத ஒப்பந்தம் செல்லும். இதனை இந்திய அரசு கேள்வி கேட்கக்கூடாது" என்று சொல்லமுடியுமா? இந்த சின்ன தகவல் கூடப் புரியாமல் அன்னா ஹஜாரேவை மக்களாட்சிக்கு எதிரி என்று கற்பிக்க முயல்கின்றனர்.

அவர்களுள் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், "நான் முக்கியமாக நினைக்கும் பிரச்சனை தான் உலகத்திற்கே முக்கியமாக இருக்க வேண்டும். வேறு எதைப்பற்றியும் யாருக்கும் பேசக் கூட உரிமை இல்லை." என்று கூறுபவர்கள். அன்னா ஹஜாரே இதற்காகத் தான் முதலில் போராட வேண்டும் என்று கூறிவர். ஆனால் நீங்கள் இதுவரை அந்த பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் வெறும் வெறுமையே மிஞ்சுகிறது. இந்த காலிக் குடங்களுக்கு சத்தம் எழுப்புவது மட்டுமே தெரிந்திருக்கிறது.மாலை வந்தால் முழூபோதையில் திளைக்கும் இந்த "குடி"மக்களுக்கு அன்னா ஹஜாரே கள்ளச்சாராயத்தை ஒழிக்க தனது கிராமத்தில் பூரண மதுவிலக்கை பரப்பினார் என்று கூறினால் பிடிக்காதுதான். குடிவெறியால் தெருவினில்... ஏன்?... வீட்டிற்குள்ளும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைப் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப் படுவது இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை கண்டித்தாலோ பெண்கள் இதனை தண்டித்தாலோ அதற்கு வன்முறை முத்திரை குத்த வந்துவிடுவார்கள். பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்தி, சாதி வேற்றுமையைத் தனது கிராமத்தில் களைந்த ஒரு உத்தமரின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளாமல்... தெரிந்து கொள்ள விரும்பாமல், அவரை பிற்படுத்தப் பட்டவரின் விரோதி என்று வதந்திகளைப் பரப்பும் வாய்மையாளர்களைப் பாராட்டுவதா? இல்லை இந்த பொய்களை பகுத்தறிவின்றி அப்படியே நம்பும் அறிவுஜீவிகளைப் பாராட்டுவதா?
இவ்வளவையும் தாண்டியே அந்த 74வயது முதியவர் போராட்டம் நடத்தினார். எப்போதுமே அன்னாவை எதிர்த்து வந்த "உண்மை விளம்பிகள்", இப்போது அவர் அந்தப் பக்கம் திரும்பிய உடனேயே பாராளுமன்ற உருப்பினர்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதற்கு பொறுப்பு ஏற்பார்களா? ஏமாற்றும் அரசியல் வாதிகளை எதிர்த்து நிற்பார்களா? தாங்களாகவும் எந்த நல்லதும் செய்யாமல், நல்லது செய்பவர்களையும் செய்யவிடாமல் இருக்கும் இவர்களைப் பற்றித் தான் பாரதி அன்றே கூறினாரோ:

நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனைச் செய்வாரடி ‍- கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!

-குழலவன்

Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Monday, December 12, 2011

வரம் தா கண்ணா!

தயிரைக் கடைந்த வெண்ணையைத் திருடுகிறாய்... இன்று
உயிரைக் கடைகிறாய் ... எதைத் திருடுவாயோ கண்ணா!!

சட்டியில் இருப்பதே அகப்பையில் வருவதால்
புத்தியில் நன்மையே சமைத்திடு கண்ணா

கலங்கிடும் போதும் நா கெட வேண்டாம் ‍ நிலை
தவறிய போதும் நெறி விட வேண்டாம்
பழகிய மனிதர்கள் கை விட்டாலும் ‍ கொண்ட‌
அழகிய ஒழுக்கங்கள் கை விட வேண்டாம்

இன்றிவை வரமென நீ தந்திடுவாய்
அன்றியும் நீயே செய்வித்திடுவாய்
உள்ளும் புறமும் உறைவாய் கண்ணா
உள்ளத்தின் உறவாய் மலர்வாய் கண்ணா!!