Thursday, July 14, 2011

தெனாலி ராமனின் ஊழல் பூனையும், கொதிக்கும் லோக்"பாலும்"

ஜன் லோக்பால் சட்டம் வந்தால் ஊழல் ஒழிப்பு நிச்சயம் தீவிரம் அடையும் என்ற எண்ணம் மக்களிடையே வலுத்துள்ளது. பாலை சுவைக்காத பூனையும் உண்டா என்ற கேள்வியையே சவாலாக ஏற்று கிருஷ்ணதேவராயரிடம் வென்று காட்டிய தெனாலி ராமனின் கதை தான் இங்கு நினைவிற்கு வருகிறது. முயன்றால் முடியாத நல்ல விஷயம் இல்லை என்பதற்கு அவரது வெற்றி ஒரு சான்று.


கொதிக்கும் பாலை பூனைக்கு கொடுத்தார் தெனாலி ராமன். பாலின் சூடு பட்டதும் தெறித்து ஓடியது பூனை. அதன் பிறகு எப்போது பாலைப் பார்த்தாலும் பூனை மிரண்டது. இக்காலத்திலும், சில ஊழல் பூனைகள் பால் போன்ற நமது நாட்டின் சத்துக்களையும் வளங்களையும் கபளீகரம் செய்து வருகின்றன. அதிகாரச்சுவை கண்ட இப்பூனைகள், "கொதித்து"ப்போன மக்கள் கொண்டு வரத்துடிக்கும் லோக்”பாலின்” சூட்டைக்கண்டு மிரள்வது தான் இப்போது நடக்கிறது. அந்த ஊழல் பூனை போடும் கூத்துக்களை மக்கள் அறிந்து வைத்துத்தான் இருக்கிறார்கள்.


எப்போது சட்டத்தை வளைத்தே பழகியவர்கள் இப்போது ஒரு சட்டத்தின் முன் தாங்கள் வளைய வேண்டிவரும் என்ற நினைப்பை கண்டு பயப்படுவது வியப்பத்ற்கில்லை.இவ்வாறு நாட்டுமக்கள் நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு நின்று "ஜன் லோக்பால்" மசோதாவை அமல்படுத்தச்செய்தால், ஊழல் பூனை பால் போன்ற சத்தான நமது நாட்டின் வளங்களை சுரண்டவும் ருசிக்கவும் பயந்து விலகுவது உறுதி.



-குழலவன்.



Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

ஊழல் ஒழிப்பும் ஊழல் ஒளிப்பும்

நாட்டில் வினோதம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு புறம் அண்ணா ஹஜாரேவின் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஊழலை எதிர்த்து போராடி வருகையில், மறுபுறம் அரசு ஊழல் எதிர்ப்பை எதிர்த்து வருகிறது. அண்ணா ஹஜாரே முன்வைக்கும், பொது மக்களால் வரையப்பட்ட "ஜன் லோக்பால்" மசோதாவிற்கு எதிராய் அரசு முன்வைத்த ஊழலை எதிர்க்கும்(?)
"லோக்பால்" மசோதா ஊழலைத்தவிர மற்ற அனைத்தையும் எதிர்க்கிறது.

உதாரணமாய் புகார் கொடுக்கும் ஒருவர், பொய் புகர் கொடுக்காமல் தடுப்பது எப்படி; அவரை எப்படி தண்டிக்கலாம்; ஊழல் புகார் எப்படி வராதபடி செய்யலாம்; வரும் புகார்களை எப்படி தள்ளுபடி செய்யலாம்; யார் யாரை எல்லாம் கண்காணிப்பு வளைடயத்திலிருந்து நீக்கலாம் என்று எல்லாம் மிக கவனத்துடன் பட்டியலிட்டு இருக்கின்றனர். ஊழல் ஒழிப்பை பாதுகாப்பாக பார்க்காமல், ஒரு கூடுதல் வேலையாய், ஒரு அச்சுறுத்த‌லாய்ப் பார்த்தால் இப்படித்தான் நடக்கும்.

ஜன் லோக்பாலில் உள்ளபடி அரசின் லோக்பாலில் குற்றவாளியின் குறைந்த பட்ச‌ தண்டனை 1வருடம் இல்லாமல் வெறும் 6 மாதம் தான். ஆனால் புகாரை நிரூபிக்க முடியாதவனுக்கு அரசின் லோக்பால் கொடுக்கும் தண்டனை 2 வருடம். குற்றவாளியை விட்டுவிட்டு, குற்றத்தை புகார் செய்தவனுக்கு பெரிய தண்டனை கொடுப்பதை, இந்த உலகத்தில் என்ன, வேற்றுகிரகங்களிலும் கூட கேள்விப்பட முடியாது! அரசு "சுவோ மோட்டோ" சக்தியை நீக்கியதன் மூலம், லோக்பால் தானாகவும் செயல் பட முடியாது. அதாவது அவர்களாகவும் எது செய்ய முடியாது, புகார் செய்பவனுக்கும் பாதுகாப்பு இல்லை, நிருபிக்காவிட்டல் தண்டனை, என்று இவ்வளவு கெடுபிடி விதித்தால் பிறகு யார் தான் புகார் கொடுப்பது? யார் நடவடிக்கை எடுப்பது.

இப்படிப்பட்ட சட்டம் ஊழல் ஒழிப்பு சட்டமாக இல்லாமல் ஊழல் ஒளிப்பு சட்டமாகத்தான் அமையும். இந்த சட்டத்தை கொண்டுவருவதால், ஊழல் எதிர்ப்போரை மிர‌ட்டி, லஞ்சத்தையும் ஊழலையும் மறை முகமாக சட்டரீதி ஆக்குவதுதான் மிச்ச‌ம். எனவே இதனை எதிர்த்து "ஜன் லோக்பால்" சட்டத்தை கொண்டு வந்தால் தான் நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும்.
-‍குழலவன்.


Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்