அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது
மனிதன் ஒரு மிருகம் தான், என ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
உண்மையும் அது தான். ஒரு செல் உயிரினம் முதல் உலகின் அரசன் என பறைசாற்றிக் கொள்ளும்
மனிதன் வரை அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் செயல்பாடு தான். மனித உடல்
விந்தைகளிலும் பெருவிந்தை. அண்ட சராசரங்களை ஆராய சென்ற மனிதனால் இன்னும்
தனக்குள்ளேயே இருப்பவற்றை முழுவதுமாக அறிய முடியவில்லை.
மனித உடலை கூறு போட்டால் மிஞ்வது
வெறும் வேதியல் பொருட்களாக, அதாவது வெறும் ரசாயனங்களாகத் தான்
இருக்கும். எல்லா உயிரினங்களுக்கும் இது பொருந்தும், உயிர் அற்ற பொருட்களுக்கும் பொருந்தும். உடல் என்பது பல்வேறு
ரசாயனங்களின் கூட்டமைப்பு. வேதியலில் மிக்சர்(mixture), காம்பௌண்ட்(compound) என இரண்டு வித கூட்டமைப்புகள் உண்டு. அணு அளவில் (atomic level) ஒன்றிணைந்த பொருட்களுக்கு (எ.கா: நீர்) காம்பௌண்ட் எனவும், அப்படி இல்லாமல் வெளி அளவில் மேலோட்டமாக கலந்து கிடக்கும் (loosely
packed in physical level) பொருட்களுக்கு (எ.கா: பால்) மிக்சர்
எனவும் பெயர். மனிதன் இவை இரண்டின் கூட்டமைப்பு (mixture of compounds).
ஆனால் இந்த வேதியல் பொருட்களால்
மட்டும் மனிதனை தீர்மானித்து விட முடியும் என்றால் ஒரு மனித பிணத்திற்கும் உயிர்
உள்ள மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. எனவே வேதியலை விட்டுவிட்டு
"செயல்பாடு" கோணத்தில் ஆராய்வோம்.
அதாவது முக்கிய உறுப்புகள் செயல்பட்டால் மனிதன், இல்லையென்றால் பிணம். இது குறைந்த பட்சம் அந்த முக்கிய உறுப்பு மூளை
என எடுத்துக் கொண்டால், சரி என்றே தெரிகிறது. அப்போது ஒரு
மனிதனின் மூளையின் செயல்பாட்டை விளக்கி விட்டால் அந்த மனிதனை விளக்கி விடலாம்.
மனித மூளையின் இந்த செயல்பாடுகள் பெரும்பாலும் விலங்குகளோடு ஒத்து போகின்றன. அவை
மூளை உடல் உறுப்புகளை செயல்படுத்துவது தொடர்பானது. அந்த பெரும்பான்மையை நீக்கி
உளவியல் பூர்வமாக பார்த்தால் தான் மனிதன் மிருகங்களிடமிருந்து வேறுபட்டு
நிற்கிறான்.
பண்டைய கிரேக்கர்கள் உலகில் உள்ள
ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தர முயன்றனர். கடைசியாக மனிதனுக்கு விளக்கம் தரும் நேரம்
வந்தது. ஒரு அறிஞர் சொன்னார் "மனிதன் ஒரு இரண்டு கால் உயிரினம்". உடன்
இருந்த ஒருவர் ஒரு புறாவை காட்டினார். வேறு ஒரு அறிஞர் சொன்னார் "மனிதன் ஒரு
இரண்டு கால் உயிரினம் ஆனால் அவனால் பறக்க முடியாது". உடன் இருந்தவர் பறக்க
முடியாத ஒரு கொழுத்த வான் கோழியை காட்டினார். அடுத்த அறிஞர் சொன்னார் "மனிதன்
இறக்கைகள் இல்லாத ஒரு இரண்டு கால் உயிரினம்". உடன் இருந்தவர் அந்த வான்
கோழியின் இறக்கைகளை வெட்டி காட்டினார். மீண்டும் அறிஞர்கள் சிந்திக்க
ஆரம்பித்தனர். இப்படியாக
பல விளக்கங்கள் கொடுத்தும் மறுக்கப்
பட்டும் வந்தன. முடிவில் அவர்கள் தீர்மானித்தனர். "மனிதன் விளக்க முடியாத ஒரு
உயிரினம். அவன் விளக்கங்களுக்கு அப்பாற் பட்டவன்". இத்தகைய விளக்கத்தை
கொடுத்ததில் பெருமையும் கொண்டனர். இது ஒரு கோணத்தில் சரி தான். ஆனால் ஆதிகாலம்
முதலே சிந்தனையில் சிறந்து விளங்கிய நம் இந்திய முன்னோர்கள் ஒரு மிக சிறந்த
விளக்கத்தை தந்தனர். அது மனிதனின் பெயரிலேயே இருக்கிறது. ஆம் "மனம்" உள்ளவர்
மனிதர். "மன" என்ற சொல்லில் இருந்து தான் "மனித" எனும் சொல்
வந்தது. வடமொழியில் "மனஸ் இதி மனுஷ்யஹா" என சொல்வர். ஆங்கிலத்தில் உள்ள
"மேன்" (man) என்ற சொல் முதல் பெரும்பாலான மொழிகளிலும் "மன" எனும் மூல
சொல் கொண்டே மனிதன் வழங்கப் படுகிறான். [*இதில் "மனிதன்" என்பது ஒரு
ஆண்பால் சொல் அல்ல. இது பெண்களையும் குறிக்கும். இது மட்டும் அல்லாமல், இந்த தொடர்
பதிவில், எந்த இடத்தில் "மனிதன்" என்றோ,
"இறைவன்" என்றோ, இல்லை வேறு எதாவது சொல்லிலோ, பொதுப்படையாக குறித்தால், அது எழுத்து
வசதிக்காகவோ, எனது சோம்பேறித் தனத்தினாலோ, கவன குறைவினாலோ
இருக்கலாமே தவிற அது ஆணை மட்டுமே குறிக்காது. மனித குலத்தில் பாதியான பெண்களை
புறந்தள்ளி விட்டு மனிதனை விளக்கிவிட முடியாது.]
இப்படியாக ஒரு மனிதனின் விளக்கமும், அவனது
அளவுகோலும் அவனது மனம் தான் என பார்த்தோமா? எனவே எந்த ஒரு மனிதனுக்கும் மிக முக்கியமானது உளவியல் பூர்வமான அவனது
மனம் தான் என காண்கிறோம். உற்று நோக்கினால் அரசியல் பிரசாரம் முதல் போர்கள் வரை,
தாய்மை முதல் காதல் வரை, விளம்பரம் முதல் அலுவலக சம்பளம் வரை, புத்தர் முதல் ஹிட்லர் வரை மனிதன் உளவியல் பூர்வமாக மட்டுமே
அணுகப்பட்டு இருக்கிறான். மனித வளத் துறையின் (HR) மாபெரும் அறிஞரான மாஸ்லோவ் (Maslov) மனிதனின்
தேவைகளை விளக்கும் தனது மஸ்லோவின் பிரமீடில் (Maslov’s pyramid) இப்படியாகத் தான் அணுகி இருக்கிறார்.
குப்பன் முதல் காந்திவரை இதில் அடக்கம். உணர வேண்டியது, மனித ஒரு வேதியல் ஜடப் பொருள் அல்ல.
எனவே ஒரு மனிதனின் நல வாழ்விற்கும்,
குடும்பங்களின் நலனிற்கும், நல்ல சமுதாய கட்டுமானத்திற்கும், மாபெரும் தேசங்களை நடத்தவும் தனி மனித உளவியல் பலம் அவசியம். கண்ணால்
காணக் கூடியவற்றை நேரடியாக கையாளலாம். ஆனால் எந்த முறையிலும் தொட அல்லது அளவிட
இயலாத உள்ளத்தை எந்த விதத்திலும் நேரடியாக நெருங்க முடியாது. அதற்கு ஒரு உளவியல்
சார்பு தேவை, ஒரு உளவியல் சக்தி தேவை, ஒரு உளவியல் மருந்து தேவை. அது தான் இறைவன். புரியும் படியாக
சொன்னால் நாத்திகத்தால் ஒரு மரணம் எப்படி நடந்தது என விவரிக்க முடியும், ஆனால் அந்த மரணத்தால் ஒடிந்து போன இழவு வீட்டின் மனங்களுக்கு மருந்து
போட முடியாது. இன்றளவும் விரக்தியில் உறைந்து போன மனதிற்கு ஆன்மீகத்தில் இருப்பது
போல எளிமையான, பெரும் செலவில்லாத, சக்திவாய்ந்த தீர்வு நாத்திகத்தில் இல்லை. இவ்வாறு இறை தத்துவம்
மனிதனுக்கு ஒரு அத்தியாவசிய தேவை ஆகிறது. உண்மையோ பொய்யோ கடவுள் தேவை என ஒரு
நாத்திக விளக்கமாக இங்கு பார்த்தோம். இனி ஆத்திகத்தையும் பார்ப்போம்.
-குழலவன்
-குழலவன்
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்
You might also like my other blog. Click here to get there.| எனது இன்னொரு வலைப்பதிவைக் காண இங்கே ஃகிளிக் செய்யவும்
No comments:
Post a Comment